ADDED : மே 23, 2024 10:26 PM
பெங்களூரு: பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான பிரபாகர் கோரே, துணை முதல்வர் சிவகுமாரை, நேற்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் உட்பட சில தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர். சமீபத்தில் துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசினர். லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், இவர்கள் காங்கிரசுக்கு தாவலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான பிரபாகர் கோரே, துணை முதல்வர் சிவகுமாரை, பெங்களூரு, சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று காலை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.எல்.இ., என்ற கர்நாடகா லிங்காயத் எஜுகேஷன் சொசைட்டியின் கட்டுப்பாட்டில், 282 கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இதன் தலைவர் பிரபாகர் கோரே. இவர் தொழில் விஷயமாக பேச, துணை முதல்வரை சந்தித்திருக்கலாம் என, கூறப்படுகிறது.