ADDED : மே 12, 2024 07:15 AM

பெங்களூரு: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் முதல்வரும், மூத்த பா.ஜ., தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கவலைக்கிடமாக உள்ளார்.
மூத்த பா.ஜ., தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, 92. சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல், பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ., பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.
மருத்துவர் சுனில் காரந்த் தலைமையிலான குழுவினர், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ உபகரணங்கள் உதவியால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக நேற்றிரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
மேலும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்றிரவு தகவல் பரவியது. இதையறிந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார். மருத்துவர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.