ADDED : ஏப் 27, 2024 05:50 AM

வீட்டில் இருந்தே ஓட்டுப்பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்திருந்தும், மூத்த குடிமக்கள் பலரும் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டனர். இளம் தலைமுறையினருக்கு முன் மாதிரியாக திகழ்ந்தனர்.
பெங்களூரின், சி.வி.ராமன் நகரில் வசிப்பவர் சிவராம கிருஷ்ண சாஸ்திரி, 86. மூத்த குடிமக்களின் வசதிக்காக, இவர், வீட்டில் இருந்து ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்திருந்தது.
சிவராமகிருஷ்ண சாஸ்திரிக்கு, வீட்டில் இருந்து ஓட்டு போட விருப்பம் இல்லை. தன் மகன், மருமகளுடன் டி.ஆர்.டி.ஓ., கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு வந்தார். இவரை போலீசார், சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று, ஓட்டு போட வைத்தனர்.
சிவராம கிருஷ்ண சாஸ்திரி கூறுகையில், ''ஓட்டு போடுவது நமது உரிமை. வீட்டில் இருந்து ஓட்டு போட்டால், அதன் மகத்துவம் தெரியாது. மக்களையும் சந்திக்க முடியாது. எனவே ஓட்டுச்சாவடிக்கு வந்தேன். அனைவரையும் சந்தித்தேன். நேரடியாக வந்து ஓட்டு போட்டால், மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்,'' என்றார்.
இது போன்று மைசூரில் 102 வயதான மூதாட்டி ஒருவர், ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.

