சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை
சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை
ADDED : மே 30, 2024 11:53 PM

ராம்பூர்,: உத்தர பிரதேசத்தில் வீட்டு உரிமையாளரை அடித்து, உதைத்து வலுக்கட்டாயமாக காலி செய்தது தொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., அசம் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் துங்கர்பூரில், கடந்த 2016ல் அப்ரர் என்பவர் வீட்டில் நுழைந்த அலே ஹாசன் மற்றும் பர்கத் அலி ஆகியோர், அவரைத் தாக்கினர். அவரது வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்ததுடன், அப்ரரை கொல்லவும் முயன்றனர்.
இவை அனைத்தும் ராம்பூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த அசம் கானின் துாண்டுதலாலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அலே ஹாசன் தொடர்பான வழக்கு பிரிக்கப்பட்டு, அவர் தொடர்பான பிற வழக்குககளுடன் சேர்க்கப்பட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், வீட்டு உரிமையாளர் தாக்கப்பட்ட வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், முக்கிய குற்றவாளியான அசம் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 14 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
பர்கத் அலிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அசம் கான், தற்போது சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெறுப்பு பேச்சு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2022ல் தன் எம்.எல்.ஏ., பதவியை அசம் கான் இழந்தார்.