வெள்ளப்பெருக்கு தடுக்க சென்சார் தொழில்நுட்பம் மழை பாதிப்பு புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
வெள்ளப்பெருக்கு தடுக்க சென்சார் தொழில்நுட்பம் மழை பாதிப்பு புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
ADDED : மே 11, 2024 06:52 AM

பெங்களூரு: மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க, கால்வாய்களில் தண்ணீர் அளவு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்களை பெங்., மாநகராட்சி அறிவித்துஉள்ளது.
பெங்களூரு நகரில் மழைக் காலங்களில், மழைநீர்க் கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இந்த வெள்ளம், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக, கால்வாய்களில் குப்பைக் கழிவுகளை அகற்றி, தண்ணீர் பாய்ந்து செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 124 இடங்களில் கால்வாய்களின் மீது தண்ணீர் அளவை தெரிவிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கால்வாய் நிரம்பும்போது, கர்நாடக பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு மையத்துக்கு உடனடியாக தகவல் செல்லும்.
அங்கிருந்து, மாநகராட்சிக்கு தகவல் வரும். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுப்பர். அனைத்து சென்சார்களுக்கும், சோலார் மின்வசதி செய்யப்பட்டுஉள்ளது.
இதுதவிர நகரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் 74 இடங்களில் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மழை பாதிப்பு ஏற்படும்போது, நிவாரண பணிகளுக்காக, மாநகராட்சி சார்பில், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், 24 மணி நேரமும், மாநகராட்சியின் 1533 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மழை வெள்ளம், பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, 080 - 2266 0000, 2297 5595, 2222 1188 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம். 94806 85700 என்ற மொபைல் எண்ணுக்கு, வாட்ஸாப்பிலும் புகார் அளிக்கலாம்.