பெங்களூரு மாநகராட்சி பிரிப்பு? பா.ஜ., கடும் எதிர்ப்பு!
பெங்களூரு மாநகராட்சி பிரிப்பு? பா.ஜ., கடும் எதிர்ப்பு!
ADDED : ஆக 30, 2024 11:47 PM

பெங்களூரு:
''பெங்களூரு நகரை துண்டு, துண்டாக வெட்டாதீர்கள். நாடபிரபு கெம்பேகவுடா உருவாக்கிய பெங்களூரு நகரை பிரிக்க வேண்டாம்,'' என பா.ஜ.,வை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சியுடன், புறநகர் பகுதிகளை இணைத்து, கிரேட்டர் பெங்களூராக உருவாக்குவதற்கு கர்நாடக அரசு சட்ட மசோதா தயாரித்தது. 400 வார்டுளை உருவாக்கி, 10 மாநகராட்சிகள் வரை அமைக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டது.
இதற்கு சட்டசபையில் பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபை கமிட்டி பரிசீலனைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் தலைவராக, பெங்களூரு சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, பெங்களூரு பிரஸ் கிளப்பில் நேற்று கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா சட்டப்படிப்பு படித்தவர். பெங்களூரு நகரை துண்டு, துண்டாக வெட்டாதீர்கள். நாடபிரபு கெம்பேகவுடா உருவாக்கிய பெங்களூரு நகரை பிரிக்க வேண்டாம். மாற்று மொழியினர் அதிகாரத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலை செய்கிறது.
மேலும், ஒன்று முதல், பத்து மாநகராட்சி வரை உருவாக்குவோம் என்று கூறி இருப்பது சரியில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் போது, மாநகராட்சி விதிமுறைகள் மாற்றப்படுகின்றன. இதனால், வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.