வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு பவானி ரேவண்ணா ஆஜராக உத்தரவு
வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு பவானி ரேவண்ணா ஆஜராக உத்தரவு
ADDED : ஆக 23, 2024 06:11 AM

ஹாசன்: வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், வரும் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா மனைவி பவானி உட்பட ஒன்பது பேருக்கு, பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல், பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.
பிரஜ்வலுக்கு எதிராக சாட்சி சொல்வதை தடுக்கும் நோக்கில், தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார்.
வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணா மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு முயற்சி செய்தது.
கைதில் இருந்து தப்பிக்க, பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் பவானி மனு செய்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார். இதை எதிர்த்து அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில், வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு விசாரணை, பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ஜே.பிரீத், விசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பவானி, அவரது உறவினர் சதீஷ்பாபு, கார் டிரைவர் அஜித் உட்பட ஒன்பது பேருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.