ADDED : மே 24, 2024 12:55 AM
நாராயண்பூர், சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், மாநில சிறப்பு தனிப்படைகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் - பீஜப்பூர் இடையிலான பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்திய போது, அங்கு சில நக்சல்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். நக்சல்களும் திருப்பி தாக்கினர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில், ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
காலை 11:00 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச் சண்டை, பல மணி நேரத்துக்கு நீடித்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வேறு சிலர் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து தண்டேவாரா, நாராயண்பூர், பஸ்தார் மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படையினர் ஈடுபட்டு உள்ளனர்.