ADDED : மே 24, 2024 12:38 AM
ஆமதாபாத்,
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, குஜராத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக் கான் குணமடைந்ததை அடுத்து, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், ஐ.பி.எல்., போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.
கடந்த 21ம் தேதி குஜராத்தில் நடந்த போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தன் அணியை உற்சாகப்படுத்தும் விதமாக அன்றைய போட்டியை குடும்பத்துடன் நேரில் பார்வையிட்ட ஷாருக் கான், அங்கு வந்த ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆமதாபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், வெப்பத் தாக்கம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் ஷாருக் கான் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது; உடனடியாக அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 'டாக்டர்களின் சிகிச்சையால் ஷாருக் கான் நலமுடன் உள்ளார். அவருடைய ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்' என, அவரின் மேலாளர் பூஜா தத்லானி தன் சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஷாருக் கான் குணமடைந்ததை அடுத்து, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.