கர்நாடகாவில் ஷவர்மாவுக்கு தடை; உணவு பாதுகாப்பு துறை திட்டம்?
கர்நாடகாவில் ஷவர்மாவுக்கு தடை; உணவு பாதுகாப்பு துறை திட்டம்?
ADDED : ஜூன் 30, 2024 11:53 PM

பெங்களூரு: கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய், கபாப், கோபி மஞ்சூரியனை அடுத்து, 'ஷவர்மா'வுக்கும் தடை விதிப்பது குறித்து மாநில உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு ஆணையம் ஆலோசித்து வருகிறது.
குழந்தைகளுக்கு பிடித்தமான பஞ்சு மிட்டாய், உணவு வகைகளில் கோபி மஞ்சூரியன், கபாப்பில் செயற்கை வண்ணம் கலக்கப்படுவதாக, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரெய்டு நடத்தி, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். அதில், செயற்கை வண்ணம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த பொருட்கள் மீது செயற்கை வண்ணம் கலக்க தடை விதிக்கப்பட்டது.
இதேபோல, சிக்கனில் செய்யப்படும் ஷவர்மா சாப்பிட்டதால், கேரளாவில் ஒரு கல்லுாரி மாணவி முன்பு உயிரிழந்தார். மேலும், பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடகாவிலும், பெங்களூரு, மைசூரு, துமகூரு, ஹூப்பள்ளி - தார்வாட், மங்களூரு, பல்லாரி, பெலகாவி உட்பட 17 மாவட்டங்களில் ஷவர்மா மாதிரிகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,வினர் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். அதில், ஒன்பது பாதுகாப்பானது என்றும்; எட்டில் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டன.
இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள விதிமுறைகள்:
உணவு தயாரிக்கும் போது, சுகாதாரமின்மை, நீடித்த சேமிப்பு மற்றும் வினியோகத்தின் போது, சுகாதாரமின்மை ஆகியவற்றால் பாக்டீரியாக்கள் உள்ளன. இதனால் அனைத்து ஷவர்மா உணவு தயாரிப்பாளர்களும், உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் புதிதாக தயாரித்து விற்க வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யிடம் அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை, ஷவர்மா விற்பனை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த சான்றிதழ் இருக்கும் கடைகளில் தான் பொது மக்கள் வாங்க அறிவுறுத்தப்படுவர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஷவர்மாவுக்கு விதிக்கப்படும் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஷவர்மாவுக்கே தடை விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.