ADDED : ஜூன் 11, 2024 04:36 AM

பெங்களூரு: ''ஷிகாவி சட்டசபை தொகுதியில், யார் வேட்பாளராக போட்டியிட்டாலும், தொகுதி என் கையை விட்டுச் செல்லாது,'' என பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
என்னால் காலியான ஷிகாவி தொகுதியில், யார் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். யாருக்கு சீட் கொடுத்தாலும், எனக்கும், ஷிகாவி தொகுதிக்குமான பந்தத்துக்கு பாதிப்பு ஏற்படாது.
இடைத்தேர்தலில் என் மகனின் பெயர் அடிபடுவது சகஜம். ஆனால் எங்கள் குடும்பத்தினர், சீட் கேட்கவில்லை. இதில் விவாதத்தை ஏற்படுத்துவது சரியல்ல. யாருக்கு சீட் கொடுத்தாலும், ஷிகாவி தொகுதி, என் கையை விட்டுச் செல்லாது.
நான், ஷிகாவி தொகுதி மக்களின் மகன், அண்ணன், தம்பி, குடும்ப உறுப்பினர். நாங்கள் முதல்வராக பணியாற்றி உள்ளோம். மற்றவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். கூட்டணி வைத்துள்ளதால் மூத்தவர்களான நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, நாங்கள் பணியாற்றினோம்; எதையும் எதிர்பார்க்கவில்லை.
நாட்டின் நலனை பா.ஜ., ஆலோசிக்கிறது. பிரஹலாத் ஜோஷி, வட மாவட்டத்தை சேர்ந்தவர்; திறமையானவர்.
வாக்குறுதித் திட்டங்கள் குறித்து, ஆளுங்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல் லாபத்துக்காக, திட்டங்கள் கொண்டு வந்தனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷின் பெயர் அடிபடுகிறது. குற்றம் உறுதியானால் அவர் ராஜினாமா செய்ய வேண்டி வரும். ஆனால் தன்னை நிரபராதி என, அவர் கூறிக்கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

