சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு; ஐ.பி.எல்., தொடருக்கும் 'குட்பை!'
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு; ஐ.பி.எல்., தொடருக்கும் 'குட்பை!'
UPDATED : ஆக 24, 2024 08:24 AM
ADDED : ஆக 24, 2024 08:18 AM

டில்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக கலக்கியவர் ஷிகர் தவான். இவர், 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தனது சிறப்பான ஆட்டத்தால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார்.
24 சதம்
தவிர்க்க முடியாத வீரராக வலம் இந்த ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் எடுத்துள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்னும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்னும் குவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை விளாசியுள்ளார்.
இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். கடைசியாக 2022ல் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார்.
ஐ.பி.எல்.,
ஐ.பி.எல்.,லிலும் டில்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
ஓய்வு
இந்த நிலையில், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
சாதனை
அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தவர். 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்தவர். ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியின் (2013,2017) இரு தொடர்களில் அதிக ரன்களை குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற ஒரே வீரர். 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.