சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; பஞ்சாபில் மர்ம கும்பல் வெறிச்செயல்
சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; பஞ்சாபில் மர்ம கும்பல் வெறிச்செயல்
ADDED : மார் 15, 2025 02:14 AM

மோகா : பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மோகா மாவட்டத்தின் சிவசேனா கட்சியின் மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர், மங்கத் ராய் என்ற மங்கா, 52. இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் இருந்து கடைக்கு செல்ல வெளியே வந்தார்.
அப்போது இவரது வீட்டின் அருகே காத்திருந்த மூன்று பேர் அடங்கிய மர்ம கும்பல், மங்காவை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. குண்டு குறிதவறி அவ்வழியாக சென்ற சிறுவன் மீது பாய்ந்ததில், அவர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மங்கா, தன் பைக்கில் தப்பியோடினார்.
இதையடுத்து அக்கும்பல் மங்காவை விரட்டிச்சென்று மீண்டும் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அப்பகுதி மக்கள், மங்காவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்ததா என்பது குறித்து விசாரித்து வரும் போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.