கடற்கரை காற்றில் கண் அயர்ந்த போது ஷாக்... அதிவேக கார்களால் நடுநடுங்கும் மும்பை
கடற்கரை காற்றில் கண் அயர்ந்த போது ஷாக்... அதிவேக கார்களால் நடுநடுங்கும் மும்பை
ADDED : ஆக 14, 2024 09:25 AM

மும்பை: மகாராஷ்டிராவில் கடற்கரையில் தூங்கிக் கொண்டிந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீச்சில் சம்பவம்
மும்பையில் நிலவும் அனல் காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, ரிக்ஷா ஓட்டுநர் கணேஷ் யாதவ் மற்றும் அவரது நண்பர் பப்லு ஸ்ரீவத்ஸா ஆகியோர், வெர்சோவா கடற்கரை சென்றுள்ளனர். இதமான காற்று வீசியதால், இருவரும் அங்கேயே ஒரு ஓரமாக படுத்து தூங்கியுள்ளனர்.
ஒருவர் பலி
இருவரும் நன்கு கண் அயர்ந்த நிலையில், அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது ஏறிச் சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த ஸ்ரீவத்ஸா, எழுந்து பார்த்த போது, கணேஷ் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளார். இதனால், அலறிய அவரது குரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, கூப்பர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், கணேஷ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
இருவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் நிகில் ஜவாலே(34) மற்றும் அவரது நண்பர் சுபம் டோங்ரே (33) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரையும் 5 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் குடிபோதையில் காரை இயக்கினார்களா? என்பது குறித்து அறிய, அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடரும் விபத்துக்கள்
கடந்த மாதம் மும்பையின் வொர்லி பகுதியில் சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்த பி.எம்.டபுள்யூ., கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார்.
அதேபோல, கடந்த ஜூலை 22ம் தேதி அதிவேகமாக வந்த ஆடி கார் 2 ரிக்ஷா மீது மோதியதில், அதன் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் காயமடைந்தனர். ஜூலை 20ம் தேதி வொர்லி பகுதியில் அதிவேகமாக வந்த பி.எம்.டபுள்யூ., கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.