ADDED : ஆக 30, 2024 11:57 PM

உடுப்பி:
உடுப்பி கடற்கரையில் மாடல் ஒருவர், பிகினி உடையில், போட்டோ ஷூட் நடத்தியதை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பெண் கோபம் அடைந்தார்.
உடுப்பியின், படுகெரே கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். நேற்று காலை இங்கு மாடல் பெண் ஒருவர், பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தினார். இதனால் இங்கிருந்த பொது மக்கள், சுற்றுலா பயணியர், தர்மசங்கடத்துக்கு ஆளாகினர். சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த உடுப்பி போலீசார், போட்டோ ஷூட்டை தடுத்து நிறுத்தினர். பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ள கூடாது என, அறிவுரை கூறி, மாடலையும், போட்டோ ஷூட் நடத்தியவர்களையும் திருப்பி அனுப்பினர்.
போலீசாரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நமது கலாசாரத்தை மறப்பது சரியல்ல. போலீசார் நடவடிக்கை எடுத்தது சரிதான் என, பாராட்டினர். போலீசாரின் செயலுக்கு, மாடல் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் கூறியுள்ளதாவது:
கடற்கரையில் நான் போட்டோ ஷூட் நடத்திய போது, அங்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். வேறு உடை அணியும்படி கூறினர். இதே உடையில் இருந்தால், உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்துவர் என, எச்சரித்தனர்.
கடற்கரை என்பது பொது இடம். இங்கு போட்டோ ஷூட் நடத்தியதில் தவறு என்ன. பிகினி உடை அணிய கூடாது என்ற சட்டம் உள்ளதா.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.