ADDED : மே 12, 2024 07:07 AM

பெங்களூரு: மெட்ரோ ரயில்களில், பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கு தகுந்தபடி பெட்டிகள் இல்லாதது, பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு, தலைவலியாக உள்ளது.
பெங்களூரில் 2011ல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் 33 கி.மீ., துாரம், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இப்போது நான்கு திசைகளிலும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திட்டம் விஸ்தரிக்கப்படுகிறது.
செல்லகட்டா, ஒயிட்பீல்டு வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது ஒரு பெட்டியில், குறைந்தபட்சம் 1,626 பேர் பயணம் செய்கின்றனர். பீக் ஹவரில் 2,500 பேர் பயணம் செய்கின்றனர். பீக் ஹவரில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும்; மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் அதற்கேற்றபடி பெட்டிகள் இல்லை.
ஆரம்பத்தில் மெட்ரோ நிறுவனம், மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கியது. பயணியர் எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெட்டிகள் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியவில்லை. ஊதா பாதையில் 43 பெட்டிகள், பசுமை பாதையில் 13 பெட்டிகள் பற்றாக்குறை உள்ளன.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, பெட்டிகள் இல்லை என்பது உண்மைதான். நம்ம மெட்ரோ ரயில் நிலைய பிளாட்பாரம், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாது.
பெட்டிகளை தயாரித்து சப்ளை செய்ய, சீனாவின் சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் நிறுவனம் டெண்டர் பெற்றுள்ளது.
ஆனால் டெண்டர் பெற்று ஐந்து ஆண்டுகளில், வெறும் இரண்டு பெட்டிகள் மட்டுமே வந்துள்ளன. இந்த பெட்டிகள், மஞ்சள் பாதைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ நிறுவனத்துக்கு, சீனா நிறுவனம் மேலும் 216 பெட்டிகளை சப்ளை செய்ய வேண்டும். இதே நிறுவனம், கோல்கட்டா அருகில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளது. இந்த நிறுவனம் மூலம் 36 பெட்டிகள் பெற, ஒப்பந்தம் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.