காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்த ஷியாம் பிரசாத் முகர்ஜி
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்த ஷியாம் பிரசாத் முகர்ஜி
ADDED : ஜூலை 07, 2024 03:08 AM

பெங்களூரு: ''இந்தியாவில் காஷ்மீரை காப்பாற்றவும்; காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குவதற்கு எதிராகவும் ஷியாம் பிரசாத் முகர்ஜி தொடர்ந்து போராடினார்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று ஷியாம்பிரசாத் முகர்ஜி ஜெயந்தி நடந்தது. மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
காஷ்மீரை காப்பாற்றவும்; காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குவதற்கு எதிராகவும் ஷியாம் பிரசாத் முகர்ஜி தொடர்ந்து போராடினார்.
லால் சவுக்
காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இதில், எடியூரப்பா, அனந்த குமார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
காஷ்மீரில் நரேந்திர மோடி தலைமையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாடுபட்டார். இதற்கு ஷியாம்பிரசாத் முகர்ஜியின் உத்வேகமே காரணம்.
மைசூரு மூடாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு ஊழல், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த பெரிய ஊழலில், முதல்வருக்கும் தொடர்பு உள்ளது. இது 'வேலியே பயிரை மேய்ந்த கதை'யாக உள்ளது.
ஆயிரக்கணக்கில் மனைகளை விழுங்கிய நில மாபியாவின் புரவலர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தான் என்பதற்கு, மாவட்ட கலெக்டர் எழுதிய கடிதங்களும்; அரசு அமைத்த நிபுணர் புலனாய்வு குழுவின் அறிக்கையும் தான் சாட்சி.
ஆலோசனை
இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பின், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளை காப்பாற்ற, விமானம் மூலம் மைசூரு சென்ற அமைச்சர், அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆதாரங்களை அழிக்க சென்ற அவர், விசாரணை நடத்தியதாக நாடகமாடினார்.
இந்த வழக்கு விசாரணை வெளிப்படையாக நடக்கிறது என்ற எண்ணம், மக்களுக்கு ஏற்பட வேண்டும்.
சி.பி.ஐ., விசாரணைக்கு விடுவது தான், முதல்வருக்கு தற்போது இருக்கும் ஒரே வழி. எந்த விசாரணை நடந்தாலும், ஊழலை மூடிமறைக்கும் நாடகம் தான் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷியாம் பிரசாத் முகர்ஜி ஜெயந்தியை ஒட்டி, அவரது படத்துக்கு, பா.ஜ., தலைவர்கள் மலர் துாவினர். இடம்: மல்லேஸ்வரம், பெங்களூரு.