எஸ்.ஐ., மரணத்தில் சி.பி.ஐ., விசாரணை? பரமேஸ்வர் மறுப்பு! எஸ்.ஐ., மரணத்தில் சி.பி.ஐ., விசாரணை? பரமேஸ்வர் மறுப்பு!
எஸ்.ஐ., மரணத்தில் சி.பி.ஐ., விசாரணை? பரமேஸ்வர் மறுப்பு! எஸ்.ஐ., மரணத்தில் சி.பி.ஐ., விசாரணை? பரமேஸ்வர் மறுப்பு!
ADDED : ஆக 08, 2024 05:59 AM

கொப்பால்: ''எஸ்.ஐ., பரசுராம் மரணம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.,க்கு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
யாத்கிர் 'சைபர் கிரைம்' எஸ்.ஐ., பரசுராம், 33. கடந்த 2ம் தேதி யாத்கிர் போலீஸ் குடியிருப்பில் உள்ள, வீட்டில் இறந்து கிடந்தார். யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துான்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர் 30 லட்சம் ரூபாய் கேட்டு, அழுத்தம் கொடுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டியதால், மன உளைச்சலில் பரசுராம் இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறினர்.
எம்.எல்.ஏ., அவரது மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவானது. இருவரும் தலைமறைவாக உள்ளனர். பரசுராம் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய, எதிர்க்கட்சி தலைவர் அசோக், பரசுராம் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், கொப்பால் காரடகி சோமனாலா கிராமத்தில் உள்ள பரசுராம் வீட்டிற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று சென்றார். பரசுராம் பெற்றோர், மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி:
எஸ்.ஐ., பரசுராம் மரணத்தில், எதிர்க்கட்சிகள் தேவையின்றி அரசியல் செய்கின்றன. அரசியல் காரணத்தால் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர். சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சி.ஐ.டி., அதிகாரிகள் திறமையாக விசாரிக்கின்றனர்.
பா.ஜ., ஆட்சியின் போது நாங்கள் ஏதாவது வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க கேட்டால், சி.ஐ.டி., திறம்பட செயல்படுகிறது என்று கூறுவர். இப்போது மட்டும் சி.ஐ.டி., வலுவிழந்து விட்டதா.
பரசுராம் மறைவால் தனிப்பட்ட முறையில் வேதனை அடைந்து உள்ளேன். அவரது குடும்பத்திற்கு ஆதரவாக இருப்போம். பரசுராம் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று, முதல்வரிடம் கூறுவேன். அவரது மனைவிக்கு அரசு வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
எம்.எல்.ஏ,, சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.