ADDED : செப் 13, 2024 07:55 AM
பெங்களூரு: யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு, வரும் 22ம் தேதி நடப்பதால், பலரது வேண்டுக்கோளுக்கிணங்க அதே நாளில் நடக்கவிருந்த எஸ்.ஐ., தேர்வு, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யு.பி.எஸ்.சி., எனும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில், வெவ்வேறு மத்திய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும். அந்த வகையில், யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு, இம்மாதம் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையில், 22ம் தேதி கர்நாடகாவில் 402 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடத்துவதாக மாநில அரசு அறிவித்தது.
இதில், 102 பேர் இரண்டு தேர்வுகளையும் எழுத உள்ளனர். இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் நடப்பதால், பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ., பிரமுகர்கள், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்து, மாணவர்களின் நலன் கருதி, எஸ்.ஐ., தேர்வை ஒத்திவைக்கும்படி வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில், 22ம் தேதி நடக்கவிருந்த எஸ்.ஐ., தேர்வை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக தேர்வு ஆணையம் நேற்று அறிவித்தது.
இது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
கர்நாடகாவை சேர்ந்த 102 பேர், யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு எழுத தேர்வாகி உள்ளனர். இவர்கள், மாநிலத்தில் நடக்கும் எஸ்.ஐ., தேர்வுக்கும் விண்ணப்பித்து உள்ளனர்.
இரண்டு தேர்வுகளும், வரும் 22ம் தேதி நடப்பதால், ஏதாவது ஒரு தேர்வு மட்டுமே எழுத முடியும். எனவே எஸ்.ஐ., தேர்வை ஒத்திவைக்கும்படி மாணவர்கள் வலியுறுத்தினர். பா.ஜ.,வும் மனு கொடுத்தது.
இது குறித்து, கர்நாடக தேர்வு ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது, டிசம்பர் வரை, ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடத்த காலி இல்லை என்று தெரிவித்தனர்.
எனவே, 28ம் தேதி சனிக்கிழமை காலியாக இருப்பதாக கூறியதால், அன்றைய தினத்துக்கு எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.