ADDED : செப் 14, 2024 11:26 PM
பெங்களூரு : யு.பி.எஸ்.சி., தேர்வு நடப்பதால், எஸ்.ஐ., தேர்வு இரண்டாவது முறை தள்ளிவைத்து, அக்., 3ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி., எனும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில், வெவ்வேறு மத்திய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும்.
அந்த வகையில், யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு, வரும் 20, 21, 22, 28, 29 ஆகிய ஐந்து நாட்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., என பல பணியிடங்களுக்கு நடக்க உள்ளன.
இதில், 22ம் தேதி, கர்நாடகாவில் 402 எஸ்.ஐ., பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஐ., தேர்வு எழுதுவோரில், 102 பேர் யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வும் எழுதுகின்றனர். அதாவது இரண்டு தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், ஒரே தேதியில் இரண்டு தேர்வு நடப்பதால், எஸ்.ஐ., தேர்வை ஒத்திவைக்கும்படி பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி, வரும் 22ம் தேதிக்கு பதிலாக, 28ம் தேதி எஸ்.ஐ., தேர்வு நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், அன்றைய தினம் யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வின் ஆங்கில தேர்வு நடக்கிறது.
இதனால் எஸ்.ஐ., தேர்வை மீண்டும் தள்ளி வைத்து, அக்டோபர் 3ம் தேதி நடத்தப்படும் என்று பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.