மணல் கடத்தலை தடுக்க சென்ற எஸ்.ஐ., டிராக்டர் ஏற்றி கொலை
மணல் கடத்தலை தடுக்க சென்ற எஸ்.ஐ., டிராக்டர் ஏற்றி கொலை
ADDED : மே 05, 2024 11:23 PM

ஷாதோல்: மத்திய பிரதேசத்தில், சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த சென்ற உதவி சப் - இன்ஸ்பெக்டர் மீது, கடத்தல் கும்பல், டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சோன் நதிக்கரையில், டிப்பர் லாரிகள் வாயிலாக சட்ட விரோதமாக மணல் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள படோலி என்ற கிராமத்தில், சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, பிரசாத் கனோஜி, சஞ்சய் துபே ஆகிய கான்ஸ்டபிள்களுடன், உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி, நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்குச் சென்றார்.
அப்போது, மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த அவர் முயன்றார். ஆனால் அதி வேகமாக வந்த டிராக்டர், உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மற்ற இரு காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், டிராக்டர் டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரின் மகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், உரிமையாளர் சுரேந்திர சிங்கை தேடி வருகின்றனர்.
அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 30,000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என, போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, இது விபத்தா அல்லது கொலையா என விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.