சித்தராமையா நெருப்பு போன்றவர் அமைச்சர் ஜமீர் அகமது கான் கருத்து
சித்தராமையா நெருப்பு போன்றவர் அமைச்சர் ஜமீர் அகமது கான் கருத்து
ADDED : பிப் 26, 2025 11:13 PM
விஜயநகரா: ''முதல்வர் சித்தராமையா நெருப்பு போன்றவர். அவரை தொட்டவர்கள் பஸ்பமாகிவிடுவர்,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
விஜயநகராவில், நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா நெருப்பை போன்றவர். யாராவது அவரை தொட்டால் பஸ்பம் ஆவர். இத்தகைய சூழ்நிலையில் அவரது நாற்காலியை தொட முடியுமா.
முதல்வர் பதவியில் சித்தராமையா, மாநில தலைவர் பதவியில் சிவகுமார் உள்ளனர். இந்த இரண்டு பதவிகளும் மாறுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
முதல்வர், மாநில தலைவர் பதவிகள் காலியில்லை. நாங்கள் முதல்வர் சித்தராமையாவை ஆட்டுக்கிடா என, அழைக்கிறோம். எங்கள் கட்சி, மேலிடத்துக்கு கட்டுப்பட்ட கட்சியாகும்.
மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். மேலிடம் ஏதாவது ஒரு முடிவு செய்தால், நாங்கள் கருத்து கூறலாம்.
எங்கள் கட்சியினர் யாரும், முதல்வர் சித்தராமையாவை மாற்ற வேண்டும் என, கூறவில்லை. அனைத்து சமுதாயத்தினருக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
சிறுபான்மையினர், எஸ்.சி., லிங்காயத் என, அனைவருக்கும் முதல்வர் பதவி எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இதை பற்றி, மேலிடம் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.