'மூடா' முன்னாள் அதிகாரிக்கு சித்தராமையா முக்கிய பதவி
'மூடா' முன்னாள் அதிகாரிக்கு சித்தராமையா முக்கிய பதவி
ADDED : ஆக 30, 2024 11:52 PM

மைசூரு :
'மூடா' முறைகேடு விவகாரத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் கமிஷனர் தினேஷ்குமார், ஹாவேரி பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மைசூரில் உள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது, மூடாவில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. அது பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
'மூடா' கமிஷனராக இருந்த தினேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஹாவேரி பல்கலைக்கழக பதிவாளராக அவரை நியமித்து, அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சித்தராமையா தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலையில், 'மூடா' முறைகேட்டிற்கு காரணமானவர் என்று கூறப்படும் தினேஷ் குமாருக்கு, பல்கலைக்கழக பதிவாளர் பதவி கிடைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.