பா.ஜ., - ம.ஜ.த.,வின் கைப்பாவை கவர்னர் மீது சித்தராமையா பாய்ச்சல்
பா.ஜ., - ம.ஜ.த.,வின் கைப்பாவை கவர்னர் மீது சித்தராமையா பாய்ச்சல்
ADDED : ஆக 03, 2024 02:48 AM

பெங்களூரு : கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், முறைகேடு நடந்துள்ளதால், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் புகார் அளித்தார்.
இதன்படி, 'உங்கள் மீதான புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் விசாரணை நடத்த ஏன் அனுமதி அளிக்க கூடாது?' என கேட்டு, முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என, கர்நாடக அமைச்சரவை நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று மைசூரில் அளித்த பேட்டி:
கவர்னர் எனக்கு நோட்டீஸ் வழங்கியது சட்ட விரோதமானது; அரசியல் அமைப்புக்கு எதிரானது. மத்திய அரசு, ராஜ்பவனை தவறாக பயன்படுத்தி கொள்கிறது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கிறது. பா.ஜ., - ம.ஜ.த.,வின் கைப்பாவையாக கவர்னர் செயல்படுகிறார்.
என் மீது புகார் அளித்த ஆபிரஹாம், பிளாக் மெயில் செய்பவர். அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்துக்கு விரோதமான செயல். நான் எந்த தவறும் செய்யவில்லை. 136 எம்.எல்.ஏ.,க்கள் என்னை முதல்வராக தேர்வு செய்து, இந்த ஆட்சி அமைந்துள்ளது.
நோட்டீஸ் அளிப்பதற்கு முன், சட்ட விதிமுறைகளை கவர்னர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். 'மூடா' முறைகேடு தொடர்பாக, காங்., மேலிட தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நான் தவறு செய்யவில்லை என்பதால், கவர்னரின் நோட்டீசுக்கு பயப்பட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.