சித்தராமையா பிரசாரத்துக்கு மவுசு ராகுல் தொகுதிக்கு செல்ல திட்டம்
சித்தராமையா பிரசாரத்துக்கு மவுசு ராகுல் தொகுதிக்கு செல்ல திட்டம்
UPDATED : ஏப் 11, 2024 01:29 PM
ADDED : ஏப் 11, 2024 05:34 AM

பெங்களூரு: வேறு மாநிலங்களிலும், தேர்தல் பிரசாரம் செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. தங்களுக்காக பிரசாரத்துக்கு வரும்படி மன்றாடுகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் மூலமாக, ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், தற்போது லோக்சபா தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் சித்தராமையா, அனல் பறக்க பிரசாரம் செய்கிறார். கர்நாடகாவில் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், இவரது பிரசாரத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது.
கர்நாடக காங்கிரசில், முதல்வர் சித்தராமையா 'மாஸ் லீடர்' என அடையாளம் காணப்பட்டவர். மாநிலத்தில் ஏழைகளுக்காக, 'அன்னபாக்யா', 'இந்திரா உணவகம்' போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது செல்வாக்கை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் துடிக்கின்றனர். எனவே தங்களுக்காக பிரசாரம் செய்யும்படி முதல்வரை அழைக்கின்றனர்.
அவரும் பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு சென்ட்ரல், ரூரல் மைசூரு உட்பட பல்வேறு லோக்சபா தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளார். திறந்த வாகனத்தில் ரோடு ஷோ, பொது கூட்டம் நடத்தி, ஓட்டு கேட்கிறார்.
இதற்கிடையில் வெளி மாநிலங்களின் காங்கிரஸ் வேட்பாளர்களும், சித்தராமையா பிரசாரத்துக்கு வர வேண்டும் என, ஆவலாக எதிர்பார்க்கின்றனர். தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்து, பிரசாரத்துக்கு வரும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு, அழைப்பு வந்துள்ளது.
மஹாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ், ஒரு நாளாவது பிரசாரத்துக்கு வாருங்கள் என, வேண்டுகோள் விடுத்துள்ளார். ராகுல் போட்டியிடும், கேரளாவின் வயநாடு தொகுதிக்கும், சித்தராமையா பிரசாரத்துக்கு செல்லவிருக்கிறார்.

