சித்தராமையா, சிவகுமார் திமிங்கலங்கள்: மத்திய அமைச்சர் ஷோபா பாய்ச்சல்
சித்தராமையா, சிவகுமார் திமிங்கலங்கள்: மத்திய அமைச்சர் ஷோபா பாய்ச்சல்
ADDED : ஆக 03, 2024 04:15 AM

மைசூரு : “வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், நாகேந்திரா சிறிய மீன்; முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் திமிங்கலங்கள்,” என, மத்திய அமைச்சர் ஷோபா குற்றஞ்சாட்டினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணம், சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதில், நாகேந்திரா சிறிய மீன். வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மூடா என, இரண்டிலும் முதல்வரே குற்றவாளி. இதற்கு சித்தராமையாவும், சிவகுமாரும் நேரடி பொறுப்பாளிகள்.
குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். குற்றமற்றவர் என, உறுதியானால், மீண்டும் முதல்வராகட்டும். ஆனால் அவர் மீண்டும் முதல்வராக மாட்டார்.
கவர்னர் நோட்டீஸ் அனுப்பியதால், முதல்வர் பயந்துள்ளார். இதற்காக அமைச்சரவை கூட்டம் நடத்தி, கவர்னருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். கவர்னரை மிரட்டும் வேலையை மாநில அரசு செய்கிறது.
முறைகேடு குறித்து புகார் அளித்தது, நாங்கள் அல்ல. பொது நபர். அவர் கொடுத்த புகாரின்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அளித்தார். இதற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, சித்தராமையா கிலி அடைந்துள்ளார். இவர் விதிகளை மீறி, தன் வீட்டினருக்கு வீட்டுமனை வழங்கியுள்ளார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்திருப்பதை, சட்டசபையில் முதல்வர் ஒப்புக்கொண்டார். அந்த பணம், தெலுங்கானா தேர்தலுக்குச் சென்றுள்ளது. தெலுங்கானா தேர்தலுக்கு பணம் வழங்கும்படி, காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி அவரும் பணம் அனுப்பினார். இது ஏழைகளுக்கு சொந்தமானது. இதை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
முதல்வர் சித்தராமையா, நிதி அமைச்சராகவும் இருப்பதால், வால்மீகி ஆணைய முறைகேடு பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்த விஷயத்தில் நாகேந்திரா, பெயருக்கு மட்டுமே. இவருக்கு பின்னால் இருப்பது சித்தராமையா தான். மத்திய அரசின் பட்ஜெட்டில், பா.ஜ., அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதியுதவி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.