மேகதாது திட்டத்துக்கு அனுமதி கேட்டு இன்று பிரதமரை சந்திக்கிறார் சித்தராமையா
மேகதாது திட்டத்துக்கு அனுமதி கேட்டு இன்று பிரதமரை சந்திக்கிறார் சித்தராமையா
ADDED : ஜூன் 29, 2024 04:34 AM

''பிரதமர் நரேந்திர மோடியை, இன்று சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி, வேண்டுகோள் விடுப்பேன்,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இது தொடர்பாக, டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காவிரி நதி நீர் விவாதம், நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 179 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட, கர்நாடகா சம்மதித்தது.
காவிரி ஆணையம்
கூடுதல் நீரை சேகரிக்க, எங்கள் மண்ணில், எங்கள் பணத்தில் மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளோம்.
தமிழக அரசு, அரசியல் காரணங்களுக்காக, மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்திடம் சென்றுள்ளது. ஆனால், எந்த நீதிமன்றமும், திட்டத்துக்கு தடை விதிக்கவில்லை. மத்திய 'ஜல்சக்தி' அமைச்சகம், காவிரி மேலாண்மை ஆணையம், மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 19ல், பிரதமரை சந்தித்த போது, மேகதாது திட்டம் குறித்து பேசப்பட்டது. நாளை (இன்று) மாலை மீண்டும் பிரதமரை சந்திக்கிறேன். தமிழகத்துடன் பேச்சு நடத்தும்படி, நாங்கள் கூறமாட்டோம். மத்திய அரசு, தமிழக அரசின் மனதை மாற்ற வேண்டும். அல்லது திட்டத்துக்கு அனுமதியளிக்க முடிவு செய்ய வேண்டும்.
காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., நட்பு கட்சியாக உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு, தி.மு.க., அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என, பா.ஜ.,வினர் கூறுவது அர்த்தமற்றது. கோவாவில் பா.ஜ., அரசு உள்ளது. அம்மாநில அரசுடன் பேசி, மஹதாயி திட்டத்துக்கு அனுமதி பெற்று வருவரா?
மஹதாயி குடிநீர் திட்டம் தொடர்பான விவாதம், 2018ல் முடிவுக்கு வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக, நேற்று (முன்தினம்) எம்.பி.,க்கள் கூட்டத்துக்கு முன், மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல். விவாதம் தொடர்பாக தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வெளியிட்டது. இது அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில், நாங்கள் மஹதாயி திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, 'டெண்டர்' அழைத்துள்ளோம். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறுவது மட்டுமே பாக்கி. விவாதம் நிலுவையில் உள்ளது என, காரணம் கூறாதீர்கள். மத்திய அரசிடம் அனுமதி பெற்று தாருங்கள் என, வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
பத்ரா மேலணை திட்டத்துக்கு, 5,300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, 2023 - 24 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தனர்.
ஆனால், நிதி வழங்கவில்லை. சில தொழில்நுட்ப பிரச்னை உள்ளதாக, மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அது என்ன பிரச்னை என, இதுவரை எங்களிடம் கூறவில்லை.
பிரமாண பத்திரம்
உண்மையில் எந்த பிரச்னையும் இல்லை. நிதி வழங்கும்படி நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோன்று, கிருஷ்ணா தீர்ப்பாய தீர்ப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்தினோம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதாக, கடிதம் எழுதியதில் அரசியல் நோக்கம் அடங்கியுள்ளது.
பொருளாதார பற்றாக்குறை 2.1 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக அதிகரித்ததாக கூறுவது, பொய்யான தகவல். கர்நாடகாவின் பொருளாதாக பற்றாக்குறை 2.6 சதவீதமாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் உயர்த்தவில்லை. கலால் வரியை மட்டும் சிறிது உயர்த்தி உள்ளோம். எனவே, அதன் விலை அதிகரித்துள்ளது. எங்கள் அரசு பால் விலையை உயர்த்தவில்லை. பால் அளவை அதிகரித்து, அதற்கான பணத்தை மக்களிடம் பெறுகிறோம்.
இதற்கு முன் மூன்று ரூபாய் அதிகரித்த போது, அதை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கினோம். பால் விலையை உயர்த்தியதாக பா.ஜ.,வினர் தேவையின்றி, போராட்டம் நடத்துகின்றனர்.
மாநிலத்தில் பணவீக்கம், தேசிய சராசரியை விட, கர்நாடகாவில் குறைவாக உள்ளது. 80 சதவீதம் பண வீக்கத்துக்கு, மத்திய அரசு காரணம்.
எஸ்.ஐ.டி., விசாரணை
நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் பெறப்பட்டது. இதில், மத்திய அமைச்சரின் பொறுப்பு என்ன. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு குறித்து, எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. பாரபட்சமின்றி விசாரணை நடக்கிறது. சி.பி.ஐ.,யும் விசாரிக்கிறது.
பா.ஜ.,வினர் ஆட்சியில் இருந்தபோது, ஒரு வழக்கையும் சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கவில்லை. ஆட்சியில் இல்லாத போது, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

