பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்
ADDED : மே 01, 2024 04:38 PM

புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்கக்கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய, ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். ஹூப்பள்ளியில் நடந்த ம.ஜ.த., உயர்மட்ட குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் குமாரசாமி இந்த அதிரடி முடிவை அறிவித்தார். ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவை, பா.ஜ., பிரமுகரான வக்கீல் தேவராஜ் கவுடாவிடம் கொடுத்ததாக, பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் 'பகீர்' தகவல் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் சித்தராமையா கூறியிருப்பதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள பிரஜ்வலை சர்வதேச போலீசார் உதவியுடன் இந்தியா அழைத்து வர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
வாய்மையே வெல்லும்!
பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா வாய்மையே வெல்லும் என எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ‛‛ எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டேன். தற்போது நான் பெங்களூருவில் இல்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என தெரிவித்துள்ளார்.