சித்தராமையா முதல்வர் பதவி: காங்., மேலிடம் அதிரடி உத்தரவு
சித்தராமையா முதல்வர் பதவி: காங்., மேலிடம் அதிரடி உத்தரவு
ADDED : ஜூலை 03, 2024 05:16 AM
பெங்களூரு : 'முதல்வர் பதவி குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்க, எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துங்கள்' என, சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தன் முதல்வர் பதவியை, துணை முதல்வர் சிவகுமாருக்கு சித்தராமையா விட்டுத் தர வேண்டுமென, ஒக்கலிக சமூக மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் கடந்த வாரம் கூறியிருந்தார். அதன்பின்னர் மேலும் சில சமூக மடாதிபதிகளும் தங்கள் சமூகத்திற்கு முதல்வர் பதவி கேட்டனர்.
சில எம்.எல்.ஏ.க்கள், சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று கூறினர். தங்களது தலைவரே, முதல்வராக நீடிக்க வேண்டும் என்று சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதனால் கட்சிக்கு புதிய தலைவலி ஏற்பட்டது.
இதனால், 'எம்.எல்.ஏ.,க்களின் வாயை அடைக்கும் வகையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்துங்கள். இந்த கூட்டத்தின்போது முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து யாரும் பேசக்கூடாதென, வாய் பூட்டுப் போடுங்கள்' என, முதல்வருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து பேசுபவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்படுமென, துணை முதல்வர் சிவகுமார் எச்சரித்திருந்தார்.
அவரது பேச்சை பொருட்படுத்தாமல் சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் பேசினர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கட்சித் தலைவர் சிவகுமார் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.