ஐந்தாண்டும் சித்து தான் முதல்வர்: அமைச்சர் தேஷ்பாண்டே உறுதி
ஐந்தாண்டும் சித்து தான் முதல்வர்: அமைச்சர் தேஷ்பாண்டே உறுதி
ADDED : செப் 14, 2024 11:39 PM
பெலகாவி : ''ஐந்து ஆண்டுகளுக்கும் சித்தராமையா முதல்வராக நீடிப்பார். அவர் முதல்வராக இருக்கும்போது, நான் முதல்வராவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை,'' என, மாநில நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.
உத்தரகன்னடா, சிர்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா தலைமையில், அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த நல்ல தலைவர். அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சித்தராமையா ஏற்கனவே முதல்வராக இருக்கும் நிலையில், என்னை முதல்வராக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தகுதி பற்றிய கேள்வி வேறு. நாங்கள் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய்களாக இருக்க வேண்டும். அரசு சிறப்பாக இயங்கும்போது, வேறு யாரும் இதுபற்றி வேறு வழியில் சிந்திக்க வேண்டாம்.
விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்றது சரியல்ல. ஊர்வலம் நடக்கும்போது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவருக்கும் பிடித்த தெய்வம் விநாயகர். எல்லோருக்கும் நன்மை செய்யும் கடவுள்.
இந்த சம்பவம் என்னை காயப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. இதை அனைவரும் கண்டிக்க வேண்டும். இது குறித்து, அரசு நடவடிக்கை எடுக்கும்.
நாகமங்களாவில் நடந்த கலவரம், சிறிய சம்பவம் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறவில்லை. அவர் கூறியதை, ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு, செய்தியாக்கி உள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.