பிரஜ்வல் ரேவண்ணா துாதரக பாஸ்போர்ட் ரத்து செய்யும்படி மோடிக்கு சித்து கடிதம்
பிரஜ்வல் ரேவண்ணா துாதரக பாஸ்போர்ட் ரத்து செய்யும்படி மோடிக்கு சித்து கடிதம்
ADDED : மே 24, 2024 06:14 AM
பெங்களூரு: வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள ம.ஜ.த., - எம்.எல்.ஏ., பிரஜ்வல் ரேவண்ணாவின் துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர், சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியே பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், பலாத்கார வழக்குகள் பதிவு ஆகி உள்ளன.
இவ்வழக்குகளை, சிறப்பு புலனாய்வு குழு, விசாரித்து வருகிறது. ஆனால், ஏப்ரல் 27ம் தேதி துாதரக பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனி சென்ற பிரஜ்வல், இன்னும் நாடு திரும்பவில்லை. அரசு தரப்பில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆபாச வீடியோக்கள் அடங்கிய 'பென்டிரைவ்' வெளியிட்டது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சிவகுமார் இடையே வார்த்தை போர் நடக்கிறது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ்வலை கண்டுபிடிக்க, சி.பி.ஐ., மூலம் 196 நாடுகளுக்கு 'ப்ளு கார்னர் நோட்டீஸ்' விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
எனவே அவரது துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, கர்நாடக அரசு தரப்பில், மத்திய அரசுக்கு, கடந்த வாரம் கடிதம் அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், பிரஜ்வலின் துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா, நேற்று கடிதம் எழுதினார்.
அதில், 'பலாத்கார வழக்கில் குற்றவாளியாக இருக்கும் அவர், கிரிமினல் வழக்கில் வழக்கில் இருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளார். துாதரக பாஸ்போர்ட் ரத்து செய்வதன் மூலம், அவரை வரவழைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யவும், பொது மக்கள் நலன் கருதியும், மத்திய அரசு உதவ வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.