சித்துவின் பாவம் அதிகரிப்பு எதிர்க்கட்சி தலைவர் காட்டம்
சித்துவின் பாவம் அதிகரிப்பு எதிர்க்கட்சி தலைவர் காட்டம்
ADDED : ஜூலை 13, 2024 04:52 AM

பெங்களூரு, : 'உப்பை தின்றவர்கள், தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். உங்களின் (சித்தராமையா) பாவம் அதிகரித்துள்ளது' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், நேற்றைய அவர் பதிவு:
முதல்வர் சித்தராமையா, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மூடா' வீட்டுமனை முறைகேட்டில் தொடர்பு கொண்டுள்ளார்.
மனை முறைகேட்டில் சட்டத்தின் பிடி இறுகுவதால், தன் வழக்கமான பாணியில், ஜாதி பெயரில் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை பற்றி கிண்டல் செய்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானார். பிற்படுத்தப்பட்ட பிரிவு நபர் ஒருவர், இரண்டு முறை பிரதமராகிவிட்டார் என்ற வயிற்றெரிச்சலில், அவரை ராகுல் விமர்சித்தாரா?
சித்தராமையாவும், அவரது பட்டாளமும் பொழுது விடிந்தால், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கின்றனர்.
உப்பை தின்றவர்கள், தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். உங்களின் (சித்தராமையா) பாவம் அதிகமாகி உள்ளது.
தன் வாழ்க்கை முழுதும், அஹிந்தா சமுதாயத்தினரின் முதுகில் சவாரி செய்யும் சித்தராமையா, தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காகவும் என்ன செய்தார்? தலித்துகளின் பணத்தை கொள்ளை அடித்தார்.
தலித்துக்கு கிடைக்க வேண்டிய பதவி நாற்காலியை பறித்து, அவருக்கு துரோகம் செய்தார். இதுதான் அவரது சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.
