ADDED : ஏப் 21, 2024 06:25 AM

குடிநீரை வியாபார பொருளாக்குவது உட்பட மக்களுக்கு எதிரான விஷயங்களை கண்டித்து, 19 ஆண்டுகளாக மவுன போராட்டம் நடத்தும் அம்ப்ரோஸ் டி மல்லோ, பாகல்கோட் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.
பெங்களூரில் வசிப்பவர் அம்ப்ரோஸ் டி மல்லோ, 57. சமூக ஆர்வலரான இவர், 'குடிநீரை விலைக்கு விற்பதை, வாங்குவதை நிறுத்த வேண்டும், அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்க வேண்டும், பொது இடங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்' என்பது உட்பட கோரிக்கைகளை முன் வைத்து, 2005 முதல் மவுன போராட்டம் நடத்துகிறார்.
தினமும் காலை முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறார். இதுவரை சட்டசபை, லோக்சபா என 13 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இம்முறை பாகல்கோட் தொகுதியை தேர்வு செய்துள்ளார். இவரிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினால், தன்னிடம் உள்ள சிலேட்டில் எழுதி பதிலளிக்கிறார்.
அம்ப்ரோஸ் டி மல்லோ கூறியதாவது:
ஓட்டு என்பது கேட்டு பெறுவது அல்ல; அது விற்பனை பொருளும் அல்ல. யாரும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க கூடாது. களத்தில் உள்ள வேட்பாளர்களில், சிறந்தவர்களை மக்களே தேர்வு செய்து ஓட்டு போட வேண்டும்.
போராட்டத்தின் மகத்துவத்தை, எவ்வளவு மக்களிடம் கொண்டு சென்றேனோ, அதை விட இரண்டு மடங்கு ஓட்டுகள் எனக்கு வந்தன.
இன்றல்ல, நாளை என் போராட்டத்தை மக்கள் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதுவே என் வெற்றி.
என் மவுன போராட்டத்தை எப்போது முடிப்பேன் என, பலரும் கேட்கின்றனர். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானால், லோக்சபாவில் பேசுவதன் மூலம், என் மவுன போராட்டத்தை முடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

