கண்ணுார் - பாகலுார் சாலையில் உயிரை பறிக்கும் 'பல்லாங்குழிகள்'
கண்ணுார் - பாகலுார் சாலையில் உயிரை பறிக்கும் 'பல்லாங்குழிகள்'
ADDED : மே 29, 2024 04:33 AM

பெங்களூரு, : வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தாக, பெங்களூரு கண்ணுார் - பாகலுார் சாலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில், பெங்களூரு நகரில் உள்ள, சாலைகள் மோசமாக இருந்தன. சாலை பள்ளங்களில் சிக்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், பா.ஜ., அரசை குறை கூறியது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், பெங்களூரை 'பிராண்ட் பெங்களூரு' ஆக மாற்றப் போவதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி வருகிறார். அவரிடம் தான் பெங்களூரு நகர வளர்ச்சி துறையும் உள்ளது. ஆனால் பெங்களூரு வளர்ச்சிக்காக, எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
வெளிவட்ட சாலை
சாலைகளின் நிலைமை முன்பை விட, இப்போது படுமோசமாக இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு, நகரின் வெளிவட்ட சாலைகள் வழியாக, எளிதில் சென்றுவிடலாம்.
ஆனால் வெளிவட்ட சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக கண்ணுார் - பாகலுார் சாலையை கூறலாம். இந்த சாலையில் பல இடங்களில், பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களின் மீது வாகனங்கள் தள்ளாடியபடி தான் செல்கின்றன.
வளரும் பகுதி
இரவில் அந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தை கவனிக்காமல் விட்டால், அவ்வளவு தான்.
விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சாலையில் தடுப்பு கம்பி கூட எதுவும் இல்லை. இத்தனைக்கும் கண்ணுார் - பாகலுார் சாலையில் உள்ள இடங்கள், வேகமாக வளர்ந்து வருகிறது.
நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் அப்பகுதியில் உள்ளன. சாலைகளின் மோசமான நிலை குறித்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், மாநகராட்சியிடம் புகார் அளிக்கவில்லையா என்றும், கேள்வி எழுந்துள்ளது.
சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா என, வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.