ADDED : ஜூலை 06, 2024 05:59 AM
பெங்களூரு: பெங்களூரில் உள்ள வருவாய் அலுவலகங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றும், சார் - பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசின் வருவாய் துறைக்கு கீழ், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பத்திர பதிவு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில் வேலை செய்யும் சில சார் - பதிவாளர்கள், மூத்த அலுவலக உதவியாளர்கள், முதல் நிலை உதவியாளர்கள் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், பெங்களூரு நகரில் 51 சார் - பதிவாளர் அலுவலகங்களில் வேலை செய்யும், சார் - பதிவாளர்கள், அலுவலக உதவியாளர்கள், முதல் நிலை உதவியாளர்களை பணியிட மாற்றம் செய்ய, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரே அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்பவர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான கவுன்சிலிங் கூடிய விரைவில் துவங்க உள்ளது. 'ஆகஸ்ட் 10ம் தேதி வரை இடமாற்றங்கள் இருக்கும்' என, சட்டசபை விவகார துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறியுள்ளார்.