ADDED : மே 04, 2024 10:53 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் பாதுகாப்புக்காக, கர்நாடக போலீசார், ஆந்திரா செல்லத் தயாராகின்றனர். மே 10 முதல் ஐந்து நாட்கள் அங்கு பணியாற்றுவர்.
நான்காம் கட்ட லோக்சபா தேர்தலில் ஆந்திரா இடம் பெற்றுள்ளது. இத்துடன், அங்கு சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களின் போலீசார், ஆந்திரா செல்ல தயாராகின்றனர். மே 10 முதல் ஐந்து நாட்கள் ஆந்திராவில் பணியாற்றுவர்.
பெங்களூரில் இருந்து 400 போலீசார் திருப்பதிக்கும், துமகூரில் இருந்து 150 பேர் ஸ்ரீ சத்யசாய் தொகுதிக்கும், சிக்கபல்லாபூரின் 150 பேர் கடப்பாவுக்கும், கோலாரின் 100 பேர் அண்ணமய்யா தொகுதிக்கும், சித்ரதுர்காவின் 100 பேர் கர்னுாலுக்கும், ராம்நகரின் 100 பேர் நந்தியால் மாவட்டத்துக்கும் செல்கின்றனர்.
கர்நாடகாவின் 14 தொகுதிகளுக்கு, வரும் 7ல் இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கிறது. இதற்காக சித்ரதுர்காவின் 764 போலீசார், ராய்ச்சூர், பல்லாரி, ஹாவேரி மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், வயதான போலீசாரை தவிர்த்து, இளம் போலீசார் தேர்தல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
கடந்த மூன்று, நான்கு மாதங்களாக பயிற்சி, வி.ஐ.பி., பாதுகாப்பு என, தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசாரால், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை.
இப்போது வேறு மாநிலத்திற்கு பாதுகாப்புக்கு செல்கின்றனர்.
கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை, வெற்றி விழா என, தேர்தல் பணிகள் முடிந்த பின்னரே, போலீசார் தங்களின் அன்றாட பணிகளை கவனிக்க முடியும் என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.