ADDED : ஜூன் 05, 2024 10:08 PM

பெங்களூரில் இருந்து 395 கி.மீ., தொலைவில், உத்தர கன்னடா மாவட்டத்தில் சிறிய மலை வாசஸ்தலமாக அமைந்துள்ளது சிர்சி. இதை 'மேற்கு தொடர்ச்சி மலையின் நுழைவு வாயில்' என்றும்; 'மலை நாடுகளின் நுழைவு வாயில்' என்றும் அழைக்கின்றனர்.
கிட்டத்தட்ட 2,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சிர்சி, அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட சுற்றுலா தலம். இங்கு ஏராளமான தாவரங்கள், வன விலங்குகளின் தாயகமாக உள்ளன. அத்துடன், பல்வேறு மத ஆன்மிக தலங்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
மழை நகரம்
ஏலக்காய், மிளகு, வெற்றிலை, வெண்ணிலா போன்ற மசாலா பொருட்களுக்கும் இப்பகுதி பெயர் பெற்றது. அழகான மழை நகரம், உள்ளூர் மக்களிடையே ஒரு வாரத்தின் கடைசி நாட்களில் பொழுது போக்கும் இடமாகும்.
உஞ்சல்லி நீர்வீழ்ச்சி, விபூதி அருவி, மாரிகாம்பா கோவில், ஸ்ரீமகாகணபதி கோவில், மாகோட் அருவி, பென்னே ஓட்டை நீர்வீழ்ச்சி, சிவங்கை அருவி, முரேகர் நீர்வீழ்ச்சி, புருடே நீர்வீழ்ச்சி, மட்டிகட்டா நீர்வீழ்ச்சி, மஞ்சுகுனி, சஹஸ்ரலிங்கம் என பல முக்கியமான சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்நகரை சுற்றி உள்ள குன்றுகள், மலையேறுவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
அனைத்து மலையேற்றங்களும் இயற்கை அழகு அல்லது மயக்கும் நீர்வீழ்ச்சிகளுடன் வெகுமதி அளிக்கின்றன.
இங்கு தோலே, கவுர், ஸ்லெண்டர் சோரிஸ், போனட் மக்காக், லாங்கூர் போன்ற அரிய வகை இனங்கள், பாம்புகள், தவளைகள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமாரிகாம்பா கோவில் திருவிழா மார்ச் மாதம் நடக்கும்.
கர்நாடகா, தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா முழுதும் இருந்து கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள், சுற்றுலா பயணியர், யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
விழா நாட்களில் நாடகங்களும் நடத்தப்படுகின்றன.
ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் சிர்சி செல்வது உகந்த நேரமாகும். அப்போது வெப்ப நிலை மிதமானதாக இருக்கும். சிர்சி மற்றும் அதை சுற்றி உள்ள பல இடங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் சென்று வரலாம்.
நீர்வீழ்ச்சிகளை பார்த்து அனுபவிக்க நினைத்தால், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்துக்கு பின், சிர்சி செல்ல சிறந்த நேரமாகும். மழை காலத்தில் விடுமுறையை திட்டமிடாதீர்கள்.
ஏனெனில், சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதால், மலையேற்ற பாதைகள் வழுக்கும். எனவே, கோடை காலத்தில் வெப்பமாகவும், ஈரமாகவும் இருக்கும் போது இங்கு செல்லலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி விமான நிலையம் செல்லலாம். அங்கிருந்து 106 கி.மீ., பஸ், டாக்சியில் பயணித்து சிர்சி செல்லலாம்.
கோகர்ணா, ஹூப்பள்ளி, ஷிவமொகா, தாலகுப்பா, பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ் இயக்கப்படுகின்றன.
- நமது நிருபர் -