ADDED : பிப் 22, 2025 09:32 PM
உத்தம் நகர்: விக்கி தக்கர் கும்பலைச் சேர்ந்த ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல விக்கி தக்கர் கும்பலைச் சேர்ந்த ரவுடி தாமர் என்ற பிரோஸ் கான். கடந்த 10ம் தேதி இரவு 10:45 மணிக்கு சாலையில் நடந்து சென்ற தாமரை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியது.
சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, மூவரையும் தடுக்க முயன்றார். அவரை மிரட்டி கும்பல், அங்கிருந்து செல்லும்படி மிரட்டியது.
அதன்பின் தாமரை சரமாரியாக அடித்து, பெரிய கான்கிரீட் துண்டால் தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்து தாமர் கீழே விழுந்தார். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதுகுறித்து கோகுல் அளித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாமரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் தாமர் உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, சோனு, 27, என்பவரை கைது செய்தனர்.
சோனுவின் சகோதரிக்கு தொடர்ந்து தாமர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல முறை எச்சரித்தும் திருந்தாததால் அவரை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சோனு கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

