எஸ்.ஐ.டி., விசாரணை நேர்மையாக இல்லை: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.டி., விசாரணை நேர்மையாக இல்லை: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
ADDED : ஆக 07, 2024 05:59 AM

பெங்களூரு : ''வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், எஸ்.ஐ.டி., நேர்மையான முறையில் விசாரணை நடத்தவில்லை,'' என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 87 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக விசாரணை நடத்த, கர்நாடக அரசு தரப்பில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணை முடிந்த நிலையில், எஸ்.ஐ.டி., தரப்பில் நேற்று முன்தினம் பெங்களூரு முதலாம் ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது.
அதில், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பசனகவுடா தத்தல் ஆகியோர் பெயர்கள் இடம் பெறவில்லை.
இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், நேற்று கூறியதாவது:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் கணக்கு கண்காணிப்பாளராக இருந்த சந்திரசேகரன், தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் நாகேந்திரா, பசனகவுடா தத்தல் பெயர்கள் இருந்தன.
ஆனால், எஸ்.ஐ.டி., குற்றப்பத்திரிகையில் இருவரது பெயர்களும் இல்லை. இதன் மூலம், எஸ்.ஐ.டி., நேர்மையான முறையில் விசாரணை நடத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
அவர்களின் பெயர்கள் இடம்பெற்றால், முறைகேடுக்கு பின்னணியில் தான் இருப்பதை சொல்லி விடுவர் என்ற பயம் முதல்வர் சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ளதா. இல்லை என்றால், முறைகேட்டை நிரந்தரமாக மூடி மறைப்பதற்கு சூழ்ச்சி நடக்கிறதா.
இவ்வாறு அவர் கூறினார்.
'எக்ஸ்' வலைதளத்தில் அசோக் வெளியிட்டுள்ள பதிவு:
1. கடந்த 2013 சட்டசபை தேர்தல் பிரமாண பத்திரத்தில், உங்கள் மனைவியின் சொத்துகளை குறிப்பிடாமல், தவறான தகவலை தந்தீர்கள். அதன்பின், 2018ம் ஆண்டு மனைவியின் சொத்து மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு பின் திடீரென உங்களுக்கு ஞானோதயம் வந்ததா?
2. தற்போது முறைகேடு விஷயம் வெளியே தெரிந்தவுடன், '63 கோடி ரூபாய் கொடுங்கள், மனைகளை திருப்பி கொடுத்து விடுகிறேன்' என்கிறீர்கள். அது எப்படி, 2018ல், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனைகள், 2024ல் 63 கோடி ரூபாயானது. இது தான் 'உருளை கிழங்கில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்' ராகுலின் திட்டத்தின் ஒரு பகுதியா.
3. அதாவது, 50:50 என்ற சதவீதத்தில் உருவாக்கப்பட்ட மனைகளுக்கு இழப்பீடு வழங்கக்கூடாது என்று நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும், மூடா தலைவர் மாரிகவுடா, மோசடிக்கு கதவை திறந்தது ஏன். இதற்கு பின்னால் எந்த செல்வாக்குமிக்க சக்தி வேலை செய்தது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.