எஸ்.ஐ.டி., அதிகாரிகள் வெளிநாடு பயணம்? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு!
எஸ்.ஐ.டி., அதிகாரிகள் வெளிநாடு பயணம்? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு!
ADDED : மே 12, 2024 10:07 PM

பெங்களூரு: 'பென் டிரைவ் வழக்கில், ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பென் டிரைவ் வழக்கில், ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்.ஐ.டி., அதிகாரிகள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இண்டர்போல் அதிகாரிகள், பிரஜ்வலின் நடமாட்டத்தை அடையாளம் கண்டு, எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பர்.
அவர் இருக்கும் இடத்தை, சி.பி.ஐ.,க்கு தெரிவிப்பர். அங்கிருந்து நமது விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் வரும்.
தற்போதைக்கு பிரஜ்வல் குறித்து, எந்த தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை நடக்கிறது. இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், எந்த தகவலையும் பகிரங்கப்படுத்த முடியாது. பென் டிரைவ் வழக்கில், தேவராஜே கவுடாவை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முடிவு செய்வர். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட, யாருடைய விமர்சனங்களுக்கும் பதிலளிக்க முடியாது. இவர்கள் மவுனமாக இருப்பது நல்லது.
இல்லையென்றால் சட்டப்படி நோட்டீஸ் அளித்து விசாரணைக்கு அழைத்து, அவர்களின் பேச்சுக்கு விளக்கம் கேட்க வேண்டி வரும். இந்த வழக்கை முன்னாள் முதல்வர் குமாரசாமி தீவிரமாக கருதுவார் என, நினைக்கிறேன்.
பொது இடங்களில் தலைவர்கள் பேசும் போது, கவனத்துடன் இருக்க வேண்டும். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினருக்கு லோக்சபா தேர்தல் பயம் வாட்டுகிறது. இதற்கு முன் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என, கூறினர்.
இப்போது திடீரென, 300 ஆக குறைத்து கொண்டனர். மக்கள் யாருக்கு ஓட்டு போட்டனர் என்பது, பா.ஜ.,வினருக்கு தெரிந்திருக்கும். எனவே குழப்பத்தில் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.