முதல்வராக மடாதிபதி உதவியை நாடிய சிவகுமார் பசனகவுடா பாட்டீல் எத்னால் பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வராக மடாதிபதி உதவியை நாடிய சிவகுமார் பசனகவுடா பாட்டீல் எத்னால் பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : ஏப் 22, 2024 07:08 AM

கலபுரகி: ''சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்க, லிங்காயத் மடாதிபதி ஒருவரின் உதவியை, துணை முதல்வர் சிவகுமார் நாடி உள்ளார்,'' என்று, பா.ஜ., -எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.
விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், கலபுரகியில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், வடமாவட்டங்களில் பா.ஜ., வலுவாக உள்ளது. இதனால் அங்கு காங்கிரசால் வெற்றி பெற முடியாது. கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், பெலகாவி, சிர்சியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது.
ஸ்ரீராம நவமி அன்று பெங்களூரில் காரில் சென்ற ஹிந்து இளைஞர்களிடம், முஸ்லிம் வாலிபர்கள் தகராறு செய்து உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பாடல் தயாரித்த வாலிபர் மீது மைசூரில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஹூப்பள்ளியில் கல்லுாரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்டு உள்ளார். இதை எல்லாம் பார்க்கும் போது, கர்நாடகாவில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஆதாரம் உள்ளதா?
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு பொறுப்பு இல்லை. பா.ஜ., ஆட்சியில் இருந்த போது 40 சதவீத கமிஷன் அரசு என்று கூறினர்.
இப்போது 50 முதல் 60 சதவீதம் கமிஷன் வாங்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறியதால், அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எங்கள் கட்சி சீட் கொடுக்கவில்லை.
இதுபோன்று முன்னாள் பிரதமர் ராஜிவ், கொப்பால் குஷ்டகி முன்னாள் எம்.எல்.ஏ., அமரேகவுடா பையாபுரா ஆகியோர் கூறி உள்ளனர். இதற்கு ஆதாரம் உள்ளது.
அம்பேத்கர் உடலை அடக்கம் செய்ய, டில்லியில் காங்கிரஸ் இடம் தரவில்லை. கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல துணை முதல்வர் சிவகுமாரிடம் ஆதாரம் உள்ளதா?
மதமாற்ற முயற்சி
லோக்சபா தேர்தல் முடிந்த பின், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் நிகழ்ச்சி நிரல் காங்கிரசிடம் உள்ளது. அமைச்சர் சிவானந்தா பாட்டீல், துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர். நான் ஒரு உண்மையை சொல்கிறேன்.
ஒரு லிங்காயத் மடாதிபதி, சிவகுமார், சிவானந்தா பாட்டீல் மூன்று பேரும், மொபைல் போனில் கான்பரன்ஸ் காலில் பேசி உள்ளனர்.
'முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை இறக்கிய பின், நான் தான் முதல்வர் ஆவேன். எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்' என்று, மடாதிபதியிடம் சிவகுமார் உதவி கோரி உள்ளார்.
பெலகாவியிலும் மதமாற்ற முயற்சி நடக்கிறது. பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகின்றனர். மானம், மரியாதைக்கு பயந்து பெண்கள் வெளியே சொல்வது இல்லை. வரும் 2047க்குள் இந்தியாவை, முஸ்லிம் நாடாக மாற்றும் முயற்சி நடக்கிறது.
இதனால் ஹிந்து பெண்களை, 'லவ் ஜிகாத்' எனும் பெயரில் காதலித்து, முஸ்லிம் வாலிபர்கள் ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். பின்னர் அவர்களை மதம் மாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

