ADDED : மார் 27, 2024 07:27 AM

சிக்கமகளூரு : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சிருங்கேரி சாரதா பீடத்திற்கு சென்ற துணை முதல்வர் சிவகுமார், ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ பாரதிதீர்த்த மகா சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசை 20 இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் தீவிரமாக உள்ளார். இதற்கான வேலைகளில் அவர் களம் இறக்கிவிட்டார்.
இந்நிலையில், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தாலா மஞ்சுநாதா, குக்கே சுப்பிரமணியா, உடுப்பி கொல்லுார் மூகாம்பிகை கோவில்களுக்கு நேற்று சென்றார்.
முன்னதாக சிக்கமகளூரு சிருங்கேரியில் உள்ள, சாரதாம்பா கோவிலுக்கு சென்று, வழிபாடு செய்த சிவகுமார், சிருங்கேரி சாரதா பீடத்தின் ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ பாரதிதீர்த்த மகா சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் கோவில் முன், ஆறு தேங்காய்களை உடைத்து வழிபட்டார். கவுரிகத்தே ஆசிரமத்திற்கு சென்று, வினய்குரு ஜி ஆசியும் பெற்றார்.
பின்னர் சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரு ரூரல் தொகுதியை பற்றி, நான் பேசவே மாட்டேன். சுரேஷ் டில்லிக்கு எம்.பி.,யாக இல்லை. கிராமங்களுக்கும் எம்.பி.,யாக இருந்தார். அவரை எதிர்த்து தேவகவுடா மருமகன் மஞ்சுநாத் போட்டியிடுவது பற்றி, எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
மோடி என்று கூச்சல் போடுபவர்கள், கன்னத்தில் அறைய வேண்டும் என்று, அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளார். கிராமப்புற பாஷையில் அப்படி கூறிவிட்டார். இதை பெரிது படுத்த வேண்டியது இல்லை.
ஒவ்வொருவரும் அவரது மதத்தை நம்பி வாழ வேண்டும். கோவில்கள், மடங்களுக்கு சென்று உள்ளேன்.
மைசூரு சென்று, சாமுண்டீஸ்வரி கோவிலுக்கும் செல்கிறேன். கடவுள் ஆசியுடன் தேர்தல் போரை, துவங்க உள்ளேன்.
எனது முயற்சி தோல்வி அடையலாம். ஆனால் பிரார்த்தனை தோல்வி அடையாது. நாங்கள் கூறியபடி ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

