ADDED : ஆக 13, 2024 11:56 PM

மாநில அரசியல் நிலவரம் குறித்து, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பின்படி, துணை முதல்வர் சிவகுமார் நேற்று அதிகாலை 5:35 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த, கட்சியின் தேசிய பொதுச் செயலர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்துக்கு பின், கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தேசிய அமைப்பு பொதுச்செயலர் வேணுகோபால், மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 'மூடா' முறைகேடு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு குறித்து தலைவர்கள் கேட்டறிந்தனர். எதிர்க்கட்சியினரின் மைசூரு பாதயாத்திரை, காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் விளைவுகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றிரவு டில்லியிலேயே தங்கிய சிவகுமார், இன்று மீண்டும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பெங்களூரு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -