ஊழலின் பிரதிபிம்பம் சிவகுமார்: சமூக ஆர்வலர் ஹிரேமத் பாய்ச்சல்
ஊழலின் பிரதிபிம்பம் சிவகுமார்: சமூக ஆர்வலர் ஹிரேமத் பாய்ச்சல்
ADDED : ஆக 25, 2024 09:55 PM

ஹாவேரி:''முதல்வர் சித்தராமையாவுக்கு நேர்மை இருந்தால், வீட்டு மனைகளை திரும்ப கொடுக்க வேண்டும்,'' என சமூக ஆர்வலர் ஹிரேமத் வலியுறுத்தினார்.
ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா, தன் நேர்மையை பற்றி அவரது மனசாட்சியிடம் கேட்கட்டும். நேர்மையானவர் என்றால், வீட்டுமனைகளை திரும்ப கொடுக்க வேண்டும். துணை முதல்வர் சிவகுமார், ஊழலின் பிரதிபிம்பம்.
சித்தராமையா முதல்வர் பதவியை, ராஜினாமா செய்ய தேவையில்லை. மனைகளை திரும்ப ஒப்படைக்கட்டும். மூடாவில் மனை வழங்கிய விஷயத்தில், அவர் கையெழுத்து போட்டாரா, இல்லையா என்பது தெரியாது. அதை நாம் பார்க்கவில்லை. கண்ணால் பார்த்தாலும், தீர விசாரிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர், மக்களிடம் நல்ல பெயருடன் இருக்க வேண்டும்.
துணை முதல்வர்
இதுவரை சித்தராமையா, ஓரளவு ஊழல் இல்லாமல் கொள்கை பிடிப்புடன் இருந்தார். ஆனால் காங்கிரசில், விளக்கு வைத்து தேடினாலும், நேர்மையானவர்கள் கிடைக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு ஊழலின் பிரதிபிம்பமாக துணை முதல்வர் சிவகுமார் இருக்கிறார்.
பா.ஜ.,வினர் ஆட்சியில் இருந்த போது, பணம் மற்றும் அதிகாரத்துக்காக என்ன செய்தனர் என்பது, அனைவருக்கும் தெரியும். இன்றைய அரசியல் கட்சிகள், பொது வாழ்க்கையில் நேர்மையை இழந்துள்ளன.
அரசு நிலத்தை குமாரசாமி அபகரித்துள்ளார். பிடதி அருகில் 200 ஏக்கர் அரசு நிலத்தில், 40 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேர்மை இருந்தால், அந்த நிலத்தை அரசுக்கு திரும்ப கொடுக்கட்டும். அபகரிக்கப்பட்ட நிலத்தில், பொது வாழ்க்கையில் உள்ளோர் இருக்க கூடாது.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணா கதை என்னவானது. பழைய வீடியோ என, தந்தை கூறுகிறார்.
இவர்கள் அசுத்தமான வேட்பாளருக்கு சீட் கொடுத்துள்ளனர் என்றால், இதை விட வெட்கக்கேடு வேறு என்ன உள்ளது. வீடியோ வெளிச்சத்துக்கு வந்ததால், இவரை மக்கள் தோற்கடித்தனர்.
அரசியல் வியாபாரம்
இன்று அரசியல் என்பது, வியாபாரம் ஆகிவிட்டது. பண பலம் உள்ள, குற்ற பின்னணி உள்ளவர்களே, அரசியலில் காணப்படுகின்றனர். நேர்மையான, சுத்தமான அரசியல் கட்சிகள் தேவை.
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் உட்பட, பல தலைவர்கள் நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்தனர். சுதந்திரம் கிடைத்த பின், அசுத்தமான அரசியலை துாய்மையாக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

