பழைய பைக்குக்கு புது வடிவம் மலரும் நினைவுகளில் சிவகுமார்
பழைய பைக்குக்கு புது வடிவம் மலரும் நினைவுகளில் சிவகுமார்
ADDED : செப் 01, 2024 11:55 PM

பெங்களூரு,: துணை முதல்வர் கல்லுாரி நாட்களில் பயன்படுத்திய முதல் பைக்குக்கு புது வடிவம் கிடைத்ததால், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மாணவர் பருவத்தில் இருந்த போது, தன் கல்லுாரி நாட்களில், 'யெஸ்டி' பைக் பயன்படுத்தினார். இந்த பைக், 'ரோடு கிங்' என்றே பிரசித்தி பெற்றிருந்தது.
இது அவருக்கு மிகவும் பிடித்தமானது. அதன்பின் அரசியலுக்கு வந்து, செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்கிறார். விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார்.
ஆயினும், தான் முதல் முதலாக பயன்படுத்திய பைக்கை, வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
துருப்பிடித்திருந்த பைக்கை, பைக் ஆர்வலர் சுப்ரித் என்ற இளைஞர் புதுப்பித்து நேற்று சிவகுமாரிடம் ஒப்படைத்தார். மகிழ்ச்சி அடைந்த அவர், பைக்கை ஓட்டி மகிழ்ந்தார்.
'எக்ஸ்' வலைதளத்தில் சிவகுமார் கூறியதாவது:
பொதுவாக இளைஞர்களுக்கு, பைக் மோகம் அதிகம் இருக்கும். அதே போன்று எனக்கும், 'பைக் கிரேஸ்' இருந்தது. கல்லுாரி நாட்களில் ஓட்டிய பைக், துருப் பிடித்திருந்தது. இதற்கு சுப்ரித் என்ற இளைஞர், புது வடிவம் கொடுத்து ஒப்படைத்தார்.
இது நான் பயன்படுத்திய முதல் பைக். கல்லுாரி பருவத்தில் பல ஆண்டுகள் ஓட்டியுள்ளேன். பைக்குடன் எனக்கு, ஆயிரக்கணக்கான நினைவுகள் கலந்துள்ளது. பைக்கை கண்டதும் அந்த நாட்களுக்கு சென்றதை போன்று உணர்வு இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.