அதிகாலை 5 முதல் இரவு 10 மணி வரை பூங்காக்களை திறக்க சிவகுமார் உத்தரவு
அதிகாலை 5 முதல் இரவு 10 மணி வரை பூங்காக்களை திறக்க சிவகுமார் உத்தரவு
ADDED : ஜூன் 11, 2024 10:42 PM

பெங்களூரு : பொது மக்களின் விருப்பப்படி, பெங்களூரு மாநகராட்சி நிர்வகிப்பில் உள்ள பூங்காக்களை, தினமும் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பசுமை நிறைந்த பெங்களூரு மாநகரில், 1,247 பூங்காக்கள் உள்ளன. பல பூங்காக்கள், தனியார் நிறுவன உதவியுடன், மாநகராட்சி நிர்வகிக்கிறது. இன்னும் பல பூங்காக்களை மாநகராட்சியே சொந்தமாக நிர்வகிக்கிறது.
கப்பன் பூங்காவில் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும்; லால்பாக் பூங்காவில் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரையிலும் பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நகரில் உள்ள மற்ற பூங்காக்கள், அதிகாலை 5:00 முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பொது மக்களுக்காக திறக்கப்படுகின்றன.
ஆனால், பூங்காக்கள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்தும்படி நகரவாசிகள் பலரும் மாநகராட்சியை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், துணை முதல்வரும், பெங்களூரு நகர வளர்ச்சி துறை நிர்வகிப்பவருமான சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பெங்களூரில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. மதிய வேளையிலும் பூங்காக்கள் திறக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும், தினமும் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பன் பூங்கா, லால்பாக், தோட்டக்கலை துறையின் கீழ் வருவதால், திறக்கும் நேரம் அவற்றுக்கு பொருந்தாது. மாநகராட்சி நிர்வகிப்பில் உள்ள பூங்காக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில், போலீஸ் ரோந்து அதிகப்படுத்தப்படும்.
பாதுகாப்பு பணியில் மார்ஷல்கள் நியமிக்கப்படுவர். பொது மக்கள், 080 - 2266 0000, 2222 1188 என்ற மாநகராட்சி தொலைபேசி எண்களிலும்; 94806 85700 என்ற மொபைல் எண்ணில் வாட்ஸாப் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.