சிவகுமார் மக்கள் இயக்கத்துக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆதரவு?
சிவகுமார் மக்கள் இயக்கத்துக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆதரவு?
ADDED : ஆக 03, 2024 11:27 PM

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் அறிவித்த மக்கள் இயக்கம் போராட்டத்திற்காக வைக்கப்பட்ட காங்கிரஸ் பேனர்களில் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரின் படம் இடம் பெற்றிருப்பது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்த பா.ஜ., சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
ஆனால், சொந்தக்கட்சி மீது அதிருப்தி அடைந்த யஷ்வந்த்பூர் எம்.எல்.ஏ., சோமசேகர், ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டுப் போடாமல் தவிர்த்தார். 'மூடா' முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
இதே விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யக் கோரி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நேற்று பாதயாத்திரையை துவக்கினர். இந்த பாதயாத்திரையிலும் அவர் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சிகள் நடத்தும் பாதயாத்திரைக்கு போட்டியாக 'மக்கள் இயக்கம்' என்ற போராட்டத்தை காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவகுமார் அறிவித்தார்.
ராம்நகர் மாவட்டம், பிடதியில் நேற்று முன்தினம் இந்த போராட்டத்தை சிவகுமார் துவக்கினார். இதை ஒட்டி, காங்கிரசார் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
அவற்றில், பிரியங்கா, அமைச்சர் மஹாதேவப்பா ஆகியோரின் பேனருக்கு இடையே தனியாக காங்கிரஸ் சின்னத்துடன் யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரின் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுபோன்ற பேனர்கள், பிடதி முதல் ராம்நகர் வரை வைக்கப்பட்டிருந்தன. பேனர் குறித்த படம், சமூக வலைதளங்களில் வைரலாகியதால், பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்தனர்.
காங்கிரசின் மக்கள் இயக்கத்துக்காக வைக்கப்பட்ட பேனரில் இடம் பெற்றிருந்த யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரின் படம்.