ADDED : ஏப் 09, 2024 06:18 AM

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டியை சந்தித்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்; இவரை காங்கிரசுக்கு இழுக்க முயற்சிக்கிறார்.
விஸ்வகர்ம சமுதாயத்தின், செல்வாக்குமிக்க தலைவரான நஞ்சுண்டி, இதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். சரியான முக்கியத்துவம் கிடைக்காததால், கட்சியை விட்டு விலகி பா.ஜ.,வுக்கு சென்றார்.
இவரை முன்னாள் முதல்வர் எடியூரப்பா எம்.எல்.சி.,யாக்கினார். நஞ்சுண்டியின் பதவிக் காலம், ஜூனில் முடிவடைகிறது. இந்நிலையில் இவரை காங்கிரசுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது.
லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, மாநில தலைவரும் துணை முதல்வருமான சிவகுமார் திட்டம் வகுக்கிறார். வேறு கட்சிகளின் தலைவர்களை காங்கிரசுக்கு இழுக்க முயற்சிக்கிறார். தற்போது பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டி மீது கண் வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம், அவரது இல்லத்தில் அவரை சந்தித்து சிவகுமார் ஆலோசனை நடத்தினார். அவரை மீண்டும் காங்கிரசுக்கு அழைத்து வர, திட்டமிட்டுள்ளார்.
