ADDED : மார் 05, 2025 07:27 AM

தனக்கு எதிராக பேசும் முதல்வர் சித்தராமையா தரப்புக்கு, துணை முதல்வர் சிவகுமார் தற்போது அதிரடியாக பதில் கொடுக்க ஆரம்பித்து உள்ளார். இதனால் முதல்வர் தரப்பு அமைதியாகி விட்டது.
முதல்வராக இருக்கும் சித்தராமையா எப்போது பதவியில் இருந்து இறங்குவார். பதவியை நாம் பிடித்து கொள்ளலாம் என்ற முனைப்பில், துணை முதல்வர் சிவகுமார் ஆர்வமாக உள்ளார். ஆனால் அவரை எப்படியாவது பதவிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்பதில், சித்தராமையா தரப்பு உறுதியாக உள்ளது.
முதல்வர் அணியை சேர்ந்த அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர், முதல்வர் பதவி மீது கண் வைத்து உள்ளனர். சிவகுமாரை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில், கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா மும்முரமாக இருந்தார்.
திடீர் பயணம்
தனக்கு எதிராக சித்தராமையா தரப்பு அமைச்சர்கள் பேசினாலும், சிவகுமார் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். எப்படியும் தங்களை பகைத்து கொள்ள மாட்டார். வாய்க்கு வந்தபடி பேசலாம் என்று, முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள் இஷ்டத்திற்கு பேசி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் சிவகுமார் திடீரென டில்லி சென்றார். ராகுல், மேலிட தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார்.
அதற்கு பின் அவரது அரசியல் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. தன்னை பற்றி வாய்க்கு வந்ததை பேசி வந்த அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். குறிப்பாக, ராஜண்ணாவை வாட்டி வதைத்தார். 'ராஜண்ணாவுக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் மட்டும் தான், செல்வாக்கு உள்ளது. ஆனால், எனக்கு கர்நாடகாவை தாண்டி பிற மாநிலங்களிலும், செல்வாக்கு உள்ளது. மற்ற மாநில மக்களும் என்னை நேசிக்கின்றனர். இதனால் கேரளா, டில்லியில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்றேன்.
ஆதரவாளர்கள் குஷி
'கட்சி எனக்கு பொறுப்பு கொடுத்து உள்ளது. மற்றவர்களை போல ஏதேதோ பேசி கொண்டு, அமைதியாக இருக்க மாட்டேன். அடுத்த தேர்தலிலும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரும் பொறுப்பு எனக்கு உள்ளது' என்று காரசாரமாக பதிலடி கொடுத்தார்.
கும்பமேளா, கோவை ஈஷா மையத்திற்கு சென்று வந்ததை வைத்து, சிவகுமாருக்கு அரசியல் ரீதியாக சிலர் செக் வைக்க நினைத்தனர். ஆனால் அதில் இருந்தும் தப்பினார். 'நான் அனைத்து மதங்களையும் நேசிக்கிறேன். நான் பிறப்பால் ஹிந்து. இறக்கும் போதும் ஹிந்து தான்' என்று அதிரடியாக கூறினார்.
மேலும், தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எங்கு ஆப்பு வைக்க வேண்டுமோ அதை சரியாக செய்து வருகிறார் சிவகுமார். 'சைலன்ட்' ஆக இருந்த சிவகுமார் திடீரென வயலன்ட் ஆக மாறியதால், முதல்வர் தரப்பு அதிர்ச்சி அடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக முதல்வர், மாநில தலைவர் மாற்றம் குறித்து ராஜண்ணா, பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி உட்பட யாரும் பேசவில்லை. சைலன்ட் மோடிற்கு சென்று விட்டனர்.
சிவகுமார் அதிரடியாக பேசுவது, அவரது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்து உள்ளது. யாராவது இனி சிவகுமாரை பற்றி பேசினால், தக்க பதிலடி கொடுக்க அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் தயாராகி வருகின்றன
ர். - நமது நிருபர் -