சிவகுமார், சுரேஷ் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
சிவகுமார், சுரேஷ் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
ADDED : ஏப் 18, 2024 03:58 AM
ராம்நகர், : துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பியும், எம்.பி.,யுமான சுரேஷ் ஆதரவாளர்கள் வீட்டில் நேற்று முன்தினம் இரவு, வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். இவரது தம்பி சுரேஷ். பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி.,யாக இருக்கும் இவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க சிவகுமார், சுரேஷ் ஆதரவாளர்கள் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, வருமான வரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, கனகபுராவில் வசிக்கும் சிவகுமாரின் நெருங்கிய ஆதரவாளரான விஜயதேவின் வீடு, அவருக்கு சொந்தமான ரிசார்ட்டில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுரேஷ் ஆதரவாளர்களான ராஜ்குமார், விஸ்வநாத் ஆகியோரின் வீடு, அலுவலகத்திலும், சுரேஷின் டிரைவர் ரகு வீட்டிலும், வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நடந்த இடங்களில் இருந்து, கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

